டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

என் ஓட்டம் என் இலக்கு: அழகூர்.  அருண்.  ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

வெல்வதற்கே   பிறந்தவன்நீ   என்றிட்டப்   போதும்
            விளக்கமுடன்   இலக்குதனைக்   கொண்டிடுதல்   வேண்டும் !
நல்விதமாய்   அதைநோக்கி   ஓடத்தான்   வாழ்வில்
            நாம்கொண்ட   இலக்குதனை   அடைந்திடக்   காண்போம் !
எல்லோர்க்கும்   பொருந்துமிது   இலக்கதுவும்   தன்னால்
             எதிரிலே   வந்ததாய்   சரித்திரம்   இல்லை !
செல்லுமிடம்   தனைநோக்கி   பயணிக்க   எண்ணார்
             சித்தமதில்   தெளிவற்றப்   பேதையரென்   றாவார் !

இலக்குதனை   நோக்கிநாம்   ஓடிடா    திருக்க
             எங்கேநாம்    போவோம் ,   எதனைச்சா   திப்போம் ?
நலன்கள்தனைப்   பெருக்கிடும்    நோக்கமதில்   கூட
              நாணயம்    நேர்மைதனை   நாம்காக்க   வேண்டும் !
சிலரேனோ   இதுதன்னை   மறந்திட்டு   வாழ்வில்
             சித்தமதில்   தெளிவின்றிக்   கொள்ளைதனை  இட்டு
பலர்தூற்றக்   காண்பதும்  ;  பழிதன்னை   ஏற்றல்
             பவித்திரம்   என்றிட்டு   ஆகிடவும்   தகுமோ ?

ஓட்டமதைக்   கொண்டிடும்   வலிமையுள்ளப்   போதும் ,
             ஓயாமல்   இருக்கின்றத்  திடங்கொண்டப்   போதும் ,
நாட்டமதில்   தெளிவினை   நாம்கொள்ள   வேண்டும்
             நாமதனை    நோக்கியே   பயணிக்க   வேண்டும் !
கோட்டைதனில்   பிறந்திட்ட   கோமகன்   மற்றும்
             குடிசைதனில்   பிறந்திட்ட   ஏழையென்றப்   போதும்,
மாட்சியதும்   தன்னாலே   வாராதாம்   என்றும்
             மாண்புடையோர்   என்றாக   மனதிலிதைக்   கொள்க !

இலக்கில்லா   வாழ்வுவோர்   துடுப்பில்லாப்   படகே,
           எத்திசையில்   போகுமது   எங்குநமை   சேர்க்கும் ?
துலக்கமுற்ற   மதிதன்னை ,  உழைப்புதனைக்   கொண்டு
           துயர்கள்தனை   ஊட்டிடும்   இடர்கள்தனை   வென்று
நலமதனை ,  வளமதனை   நாம்காண   வேண்டும்
           நாணயம்,   நேர்கொண்ட   வழிசெல்ல   வேண்டும் !
உலகமே   அறிந்திட்ட   உயர்வுதனைக்   கண்டோர்
           உறுதியுடன்   இலக்கடைய   ஓடியவர்   தானாம் !

உயர்வுதனை   நோக்கிசெல்ல   திட்டங்களைத்   தீட்டு  !
           உறுதியுடன் ,  திறமையுடன்   கடமைதனை   ஆற்று !
அயர்வுதனைக்  காணாத   மனமென்றப்   போதில்
           அனைத்திலும்   வெற்றியே   என்றாகும்   எளிதில் !
துயர்கள்தனைக்   கண்டென்றும்   துவளாமை   வேண்டும்
           துடிப்பினை,  துணிவுதனைத்   துணைகொள்ள  வேண்டும் !
வியர்வைதனைச்   சிந்தார்க்கு   வெற்றியென்றும்   இல்லை ,
           வீண்கனவு   கண்டோர்க்கு   விடிவென்றும்   இல்லை !
           

வாழ்வினில்   தடம்பதிக்கும்   வைராக்யம்   வேண்டும் ;
            வளமதனைக்   காணும்வழி   நல்வழியென்   றாக 
தாழ்வுதனைக்   காண்போமோ ,   தலைதாழ்வும்  வருமோ ,
            தரங்கெட்ட  குடிமகனென   பிறர்பழிக்கத்   தகுமோ ?
ஆழ்ந்திதை   சிந்தித்து   நோக்கமொன்றைக்   கொள்க,
            அயராமல்   உழக்கும்மன   உறுதியைப்  பெறுக !
ஏழ்தலத்தோர்   புகழ்கின்ற   நல்வாழ்வைக்   காண
            என் ஓட்டம்   தொடர்ந்திடுமாம் ,  என் இலக்கும்   அதுவே !

என் ஓட்டம்   என்றென்றும்   என் இலக்கு    தனைனோக்கி;
நன்முறையில்   அடைவேனென   நம்புகிறேன் ! ---- தென்றல்போல்
எதுவொன்றும்   வாழ்வினிலே   எளிதாகக்   கிட்டாதாம் ;
இதுதனைநீ   மறவாமல்   இரு !          

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.